கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை அமுல்படுத்தக் கூடிய உறுதியான தலைமைத்துவத்தையே எதிர்பார்க்க கூடிய நாங்கள் தமிழ் பேசும் மக்களால் எதிர்பார்க்கப்படும் தலைமைத்துவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
யுத்தம் முடிவடைந்து மூன்று நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அரசாங்கத்தினால் இதுவரை இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
தேசத்திற்கு மகுடம் என்ற அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அரசாங்கம் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க இன்னமும் தயார் இல்லை.
பௌத்த சிங்கள பேரினவாதம் அதற்கு தடையாக உள்ளது. இதனை சர்வதேசம் சமூகம் தற்போது புரிந்துள்ளது. இப்படியான சூழ்நிலையிலே கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலை கடந்த மாகாண சபை தேர்தலுடன் ஒப்பிட முடியாது. முதற்தடவையாக தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கவிருக்கும் தீர்ப்பை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது என்பதை நாம் புரிந்து செயற்பட வேண்டும்.
இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான ஆதரவை பெறச் செய்வதன் மூலமே யுத்தம் முடிந்தாலும் தமிழ் மக்களின் போராட்டம் இன்னமும் முற்றுப் பெறவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும், பௌத்த பேரினவாத சக்திகளுக்கும் செய்தியாக எடுத்துரைக்க முடியும்.
வட கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்பேசும் மக்களின் தாயகம், தமிழ் பேசும் மக்கள் தங்களை தாங்கள் சுயமாக ஆளவேண்டும்.சுயமான ஆளும் அதிகாரத்தை கொண்ட அரசியல் தீர்வொன்றை ஏற்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ள இந்நேரத்தில் நாம் இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்து எமது பலத்தை மேலும் வலுப்பெறச் செய்வோம்.
அப்படி அல்லாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அல்லது அதன் உறுதிக் கட்சிகளுக்கோ எமது தமிழ் மக்கள் ஆதரவு வழங்கினால் அது எதிர்காலத்தில் எமக்கே பாதகமாக அமர்ந்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.