நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் திடீர் இயந்திர கோளாறு!
[Thursday, 09/08/2012 12:57 AM]
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெயாங்கொடை வரை செல்லும் பிரதான மின்சாரப் பாதையில் திடீரென ஏற்பட்ட குறைபாட்டினால் லக்விஜய மின் நிலைய மின் உற்பத்தி இயந்திரம் தன்னிச்சையாக செயல் இழந்துள்ளது.
இதனால் மின் நிலைய சகல பிரிவுகளையும் செயலிழக்கச்செய்ய நேரிட்டதாக மின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது முற்பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலைமை காரணமாக தேசிய மின் வலையமைப்பில் 300 மெகாவோட் மின்சாரம் நேற்று காலை முதல் இழக்கப்பட்டது. விசேட பொறியியலாளர் குழு நிலைமையை வழமைக்குக்கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான குறைபாடுகளின் போது மின்நிலைய உற்பத்தி பிரிவிலும் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தன்னியக்க செயலற்ற தன்மை மூலம் "பெயாரிஸ்" போன்ற பிரிவுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா? என பரிசீலிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பாக பொறியியலாளர்கள் விசேட கவனத்துடன் செயற்படுகின்றனர். இத்தகைய நிலைமை தொடர்பாக சரியான மதிப்பீட்டை மாலையிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பிரகாரம் எதிர்வரும் நடவடிக்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும். இத்தகைய நிலைமையின் போது எடுக்க வேண்டிய சகல துரித நடவடிக்கை களும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மின்சார சபைத் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்தார்.