ஹெஜிங் உடன்படிக்கையின் படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும். இதற்கு எதிரான வழக்கிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளது.
கடந்த 2007 இல் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்து கொண்டிருந்தபோது வங்கிகளிடம் இழப்பீடு பெறும் வகையில் ஹெஜிங் உடன்படிக்கைசெய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்தது.
ஆனால், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால், உடன்படிக்கை செய்துகொண்ட வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பணம் வழங்கும் வகையில் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது.
பிரிட்டனை தளமாகக் கொண்ட ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி, சிட்டி பாங்க், டொச் பாங்க் உட்பட 5 வங்கிகளுடன் ஹெஜிங் உடன்படிக்கை செய்யப்பட்டது.
கடந்த 2008 ஜூலையில் உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் 147 டொலர் வரை உயர்ந்த நிலையில் இந்த உடன்படிக்கை மூலம் சி.பி.சி. நன்மை பெற்றது. ஆனால் அதே வருட பிற்பகுதியில் மசகு எண்ணெய் விலை 40 டொலரைவிட குறைந்ததால் பெருந்தொகை பணத்தை வங்கிகளுக்கு சி.பி.சி செலுத்த வேண்டியிருந்தது.
இந்த உடன்படிக்கையின்படி பணத்தை வழங்க சி.பி.சி மறுத்ததாக குற்றம் சுமத்தி, ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில், பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மேன்முறையீடு செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நாம் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.