கரையோரப் பாதுகாப்பை தீவிரப்படுத்துகிறது சிறிலங்கா கடற்படை
[Wednesday, 04/07/2012 12:34 AM]
சிறிலங்காவில் கரையோரப் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாலும், ஆட்கடத்தல்கள் தீவிரமடைந்துள்ளதாலும் சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கற்பிட்டி தொடக்கம் பூநகரி வரையான, வடமேற்கு கடற்பிரதேசத்தின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சிறிலங்காவின் வடமத்திய மற்றும் வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகங்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள கடற்பகுதியில் அதிகளவிலான கரையோர ரோந்துப் படகுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
தமிழ்நாட்டு மீனவர்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் 13 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.